குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
Friendship of fools is very pleasant thing, Parting with them will leave behind no sting
அதிகாரம் - 84 - பேதைமை
மு.வரதராசன் விளக்கம்
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை
பரிமேலழகர் விளக்கம்
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!