குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his part
அதிகாரம் - 84 - பேதைமை
மு.வரதராசன் விளக்கம்
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.