குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known
அதிகாரம் - 83 - கூடாநட்பு
மு.வரதராசன் விளக்கம்
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
பரிமேலழகர் விளக்கம்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.