குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்
மு.வரதராசன் விளக்கம்
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
பரிமேலழகர் விளக்கம்
சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று