குறள் 818:

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew
அதிகாரம் - 82 - தீ நட்பு
மு.வரதராசன் விளக்கம்
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.