குறள் 812:

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail depart
அதிகாரம் - 82 - தீ நட்பு
மு.வரதராசன் விளக்கம்
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப் பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
பரிமேலழகர் விளக்கம்
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது? (தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?