குறள் 795:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்
மு.வரதராசன் விளக்கம்
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.