குறள் 783:
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good
அதிகாரம் - 79 - நட்பு
மு.வரதராசன் விளக்கம்
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
படிக்க படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
பரிமேலழகர் விளக்கம்
பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.