குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife
அதிகாரம் - 78 - படைச்செருக்கு
மு.வரதராசன் விளக்கம்
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.