குறள் 768:

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled
அதிகாரம் - 77 - படைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.