குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence
அதிகாரம் - 77 - படைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.