குறள் 762:

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show
அதிகாரம் - 77 - படைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.