குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is known
அதிகாரம் - 76 - பொருள்செயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர <br>வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.
பரிமேலழகர் விளக்கம்
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.