குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
92 Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
அதிகாரம் - 76 - பொருள்செயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.