குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command
அதிகாரம் - 76 - பொருள்செயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.
பரிமேலழகர் விளக்கம்
பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா விளக்கம்
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.