குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
Nothing exists save wealth, that can Change man of nought to worthy man
அதிகாரம் - 76 - பொருள்செயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.