குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within
அதிகாரம் - 75 - அரண்
மு.வரதராசன் விளக்கம்
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.
பரிமேலழகர் விளக்கம்
முற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.