குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess
அதிகாரம் - 75 - அரண்
மு.வரதராசன் விளக்கம்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.