குறள் 74:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds
அதிகாரம் - 8 - அன்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்