குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase
அதிகாரம் - 74 - நாடு
மு.வரதராசன் விளக்கம்
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.