குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe
அதிகாரம் - 74 - நாடு
மு.வரதராசன் விளக்கம்
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.