குறள் 720:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herd
அதிகாரம் - 72 - அவையறிதல்
மு.வரதராசன் விளக்கம்
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது,தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா விளக்கம்
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.