குறள் 710:

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

The men of keen discerning soul no other test apply (When you their secret ask) than man's revealing eye
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்குப் பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை. (அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.