குறள் 708:
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர்,ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.
பரிமேலழகர் விளக்கம்
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம்.குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.