குறள் 699:

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view
அதிகாரம் - 70 - மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு.வரதராசன் விளக்கம்
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில்,ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.