குறள் 697:

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard
அதிகாரம் - 70 - மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு.வரதராசன் விளக்கம்
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.