குறள் 695:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear
அதிகாரம் - 70 - மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு.வரதராசன் விளக்கம்
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.