குறள் 688:

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

Integrity, resources, soul determined, truthfulnessWho rightly speaks his message must these marks possess
அதிகாரம் - 69 - தூது
மு.வரதராசன் விளக்கம்
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
வழி உரைப்பான் பண்பு=தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்லுவானது இலக்கணமாவன; தூய்மை= பொருள் காமங்களான் தூயனாதலும்; துணைமை= தனக்கு அவர்அமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை= துணிதல்உடைமையு்ம்; இம்மூன்றின் வாய்மை= இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை.
சாலமன் பாப்பையா விளக்கம்
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.