குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
Sense, goodly grace, and knowledge exquisite Who hath these three for envoy's task is fit
அதிகாரம் - 69 - தூது
மு.வரதராசன் விளக்கம்
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு,ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்
பரிமேலழகர் விளக்கம்
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.(இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.