குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the task
அதிகாரம் - 68 - வினைசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.