குறள் 674:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring
அதிகாரம் - 68 - வினைசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)