குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they say
அதிகாரம் - 67 - வினைத்திட்பம்
மு.வரதராசன் விளக்கம்
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
பரிமேலழகர் விளக்கம்
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.