குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find
அதிகாரம் - 67 - வினைத்திட்பம்
மு.வரதராசன் விளக்கம்
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
பரிமேலழகர் விளக்கம்
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.