குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை
மு.வரதராசன் விளக்கம்
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
பரிமேலழகர் விளக்கம்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.