குறள் 651:
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
துணை நலம் ஆக்கம் தரூஉம் - ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். (வேண்டிய எல்லாம் என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும்,மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும் கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.