குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refute
அதிகாரம் - 65 - சொல்வன்மை
மு.வரதராசன் விளக்கம்
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.