குறள் 643:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
'Tis speech that spell-bound holds the listening ear, While those who have not heard desire to hear
அதிகாரம் - 65 - சொல்வன்மை
மு.வரதராசன் விளக்கம்
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது. ((அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)