குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd
அதிகாரம் - 7 - புதல்வரைப் பெறுதல்
மு.வரதராசன் விளக்கம்
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.
பரிமேலழகர் விளக்கம்
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.