குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away
அதிகாரம் - 63 - இடுக்கணழியாமை
மு.வரதராசன் விளக்கம்
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.