குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.