குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contempt
அதிகாரம் - 61 - மடியின்மை
மு.வரதராசன் விளக்கம்
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர். ('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.