குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shore
அதிகாரம் - 61 - மடியின்மை
மு.வரதராசன் விளக்கம்
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!
பரிமேலழகர் விளக்கம்
மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.