குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity
அதிகாரம் - 61 - மடியின்மை
மு.வரதராசன் விளக்கம்
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக. ('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.