குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்
மு.வரதராசன் விளக்கம்
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
பரிமேலழகர் விளக்கம்
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.