குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'
அதிகாரம் - 1 - கடவுள் வாழ்த்து
மு.வரதராசன் விளக்கம்
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)
சாலமன் பாப்பையா விளக்கம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்