குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will
அதிகாரம் - 60 - ஊக்கமுடைமை
மு.வரதராசன் விளக்கம்
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.