குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benign
அதிகாரம் - 58 - கண்ணோட்டம்
மு.வரதராசன் விளக்கம்
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.