குறள் 574:

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright
அதிகாரம் - 58 - கண்ணோட்டம்
மு.வரதராசன் விளக்கம்
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?