குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear
அதிகாரம் - 58 - கண்ணோட்டம்
மு.வரதராசன் விளக்கம்
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.