குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die
அதிகாரம் - 57 - வெருவந்தசெய்யாமை
மு.வரதராசன் விளக்கம்
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.
பரிமேலழகர் விளக்கம்
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். '(வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.